விசாரணையில் பகீர் தகவல்.! 'கோல்ட்ரிப்' மருந்தில் அழகு சாதன தயாரிப்புக்கான மூலப்பொருள் கலப்பு..!
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், 'கோல்ட்ரிப்' மற்றும், 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' என்ற இருமல் மருந்து குடித்த, 22 குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தனர். அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திலும் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில், கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்திலும், நெக்ஸ்ட்ரோ டி.எஸ். மருந்து, குஜராத் மாநிலத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில், அந்த மருந்து நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப் பட்டு, நிறுவனமும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில், கோல்ட்ரிப் மருந்து தயாரித்த, 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தின் உற்பத்தி மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், 75, அவரது நிறுவனத்தின் மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி ஆகியோரை, மத்திய பிரதேச போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், கோல்ட்ரிப் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, 'புரோப்பிலின் கிளைக்கால்' மூலப்பொருள், மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருளாக இல்லாமல், அழகு சாதன பொருட்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.


