இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்..

நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக நாடு முழுவதும் இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் வேகமாகா பரவி வருகிறது. பலரும் காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளை நாடி வருவது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் இந்த காய்ச்சல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் பருவகாலங்களில் ஏற்படுவது இயல்பு என்றாலும், இந்தாண்டு பருவநிலை மாறுபாடு, ஒரு அரங்கிற்குள் அதிக மக்கள் ஒன்று கூடுவது, மக்களின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட காரணங்களால், இது வேகமாக பரவிவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக H3N2, H1N1, அடினோ வைரஸ் போன்ற வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பான முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது என கொரோனாவுக்கு பின்பற்றியது போன்ற சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புர்ணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
H1N1, H3N2 வைரஸால் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், நீரிழிவு, உடல் பருமன், கல்லீரல் பாதிப்பு போன்ற இணை நோய் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவை தவிர மருத்துவமனைகளில் இந்த நோய் தொடர்பான அத்தியாவசிய மருந்துகள், மருத்துவசாதனங்கள், ஆக்சிஜன், போதிய மனித வளம் போன்றவை இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில மாநிலங்களில் நோய்த்தொற்று விகிதம் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், அதனை முறையாக அணுகுமாரும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.