தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் சரிவு... 6 ஆண்டுகளில் 18% வீழ்ச்சி..

 
1 1

தேசிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.3 முதல் 1.5% வரை குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 3.1% அளவுக்குப் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

நடப்பு ஆண்டின் டிசம்பர் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு சுமார் 7 லட்சத்து 80,000 குழந்தைகள் மட்டுமே பிறக்க வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த 6 ஆண்டுகளில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையில் 18% வீழ்ச்சியைக் காட்டுகிறது.

கடந்த 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் திருமணத்துக்குப் பிறகு விரைவாகக் கர்ப்பம், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது என்பது குடும்ப வாழ்க்கையின் இயல்பான அம்சமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது.

பிறப்பு விகிதம் குறைவதற்கான முக்கியக் காரணங்களாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுபவை. பெண்களின் கல்வித் தரம் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருமணம் செய்துகொள்ளும் வயது உயர்ந்ததால், குழந்தை பெறும் காலம் இயற்கையாகவே தள்ளிப்போகிறது.

குழந்தை வளர்ப்பில் கல்வி, சுகாதாரம், எதிர்கால வாழ்க்கைத்தரம் ஆகியவற்றுக்கு பெற்றோர் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி உள்ளனர். இதன் விளைவாக, 'நாம் இருவர் நமக்கு ஒருவர்' என்ற மனநிலை வலுப்பெற்றுள்ளது.

நகரமயமாக்கல், கல்விப் போட்டி மற்றும் வேலைவாய்ப்பு அழுத்தம் ஆகியவை மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பதும் பிறப்பு எண்ணிக்கை குறைவதற்குக் காரணங்களாக உள்ளன.