இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ரத்தினம், காபி, மருந்துப் பொருட்களுக்கு இனி முழு வரிவிலக்கு!

 
1 1

அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு முக்கிய பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் இனி முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) மற்றும் இந்திய விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள். அமெரிக்கா போன்ற ஒரு மிகப்பெரிய உலகளாவிய சந்தையில், இந்திய வர்த்தகர்கள் தங்களது பொருட்களைப் கூடுதல் வரிச்சுமையின்றி எளிதாக விற்பனை செய்வதற்கான பொற்கால வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஏற்றுமதியின் போது முழு வரிவிலக்கு பெறப்போகும் முக்கிய பொருட்களின் பட்டியல் இதோ:

  • ஆபரணங்கள்: ரத்தினங்கள் மற்றும் வைரங்கள்.

  • தொழில்நுட்பம் & தயாரிப்பு: ஸ்மார்ட் போன்கள் மற்றும் விமான பாகங்கள்.

  • மருந்துத் துறை: பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள்.

  • இயற்கை பொருட்கள்: தாவர மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய்.

வேளாண் சார்ந்த மற்றும் உணவுப் பொருட்களுக்கும் இந்த வரிவிலக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அந்த வகையில் தேநீர், காபி, மசாலா பொருட்கள், தேங்காய், பாக்கு, முந்திரி, பிரேசில் நட்ஸ், செஸ்ட்நட் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு கிடைத்துள்ளது. மேலும் பழவகைகளான அவகோடா, வாழைப்பழம், மாம்பழம், அன்னாசிப்பழம், காளான் மற்றும் சில குறிப்பிட்ட பேக்கரி தயாரிப்புகளும் இனி வரி ஏதுமின்றி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்.