ஈரானில் உள்ள இந்தியர்கள் 48 மணி நேரத்திற்குத் வீட்டிலேயே இருங்கள், ராணுவ தளங்களுக்கு செல்ல வேண்டாம் - இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை..!

 
1

இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ஆலேசனையில, "ஈரானில் இன்னும் தங்கியிருக்கும் இந்தியர்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு தற்போதைய இடத்திலேயே இருக்க வேண்டும். மின்சாரம், ராணுவ நிலைகள் மற்றும் பலமாடி கட்டிடங்களின் மேல் தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தூதரகத்துடன் கலந்தாலோசித்த பின்னரே நெடுஞ்சாலைப் பயணங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கேயே இருக்க வேண்டும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அவசர கால தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது ஈரானில் சுமார் 8,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் 935 மாணவர்கள் மற்றும் 472 மீனவர்கள் உட்பட மொத்தம் 1,862 இந்தியர்களை ஈரான் வழியாக ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கு அனுப்பி, அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

பிப்ரவரி 28 முதல் (அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து), இப்பகுதியிலிருந்து சுமார் 7.6 லட்சம் பயணிகள் இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ளனர். இந்தியக் கப்பல்களில் பணியாற்றும் அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்தியக் கப்பல்கள் தொடர்பான அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை. தற்போது, 16 இந்தியக் கப்பல்களில் 433 மாலுமிகள் மேற்கு பாரசீக வளைகுடா பகுதியில் உள்ளனர். இதுவரை 1,691 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் 6 முறையும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளின் அமைச்சர்களுடன் பலமுறையும் பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் நாட்டுத் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளார். போர் தொடங்கியதில் இருந்து அவர் ஒவ்வொரு தலைவருடனும் குறைந்தது 2 முறையாவது பேசியுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.