இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு சுவீடனின் உயரிய கிராபோர்டு பரிசு அறிவிப்பு..!!
2026க்கான புவி அறிவியல் பிரிவில் மதிப்புமிக்க, 'கிராபோர்டு' பரிசை, சுவீடனின், 'ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி' அறிவித்துள்ளது.
புவி அறிவியலின் நோபல் பரிசு என்றழைக்கப்படும் கிராபோர்டு விருது, ஐரோப்பிய நாடான சுவீடன் நாட்டின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமியால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து,
தற்போது அமெரிக்காவின் கலி போர்னியா பல்கலையில் பேராசிரியராக பணியாற்றி வரும் வீரபத்ரன் ராமநாதனுக்கு, 82, நடப்பாண்டுக்கான கிராபோர்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் சேரும் சிறிய துகள்கள் மற்றும் வாயுக்கள் எவ்வாறு காலநிலை மாற்றத்துக்கு காரணமாகின்றன என்பது குறித்து விளக்கியதற்காக, இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணாமலை பல்கலை மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் பட்டம் பெற்ற வீரபத்ரன் ராமநாதன், அமெரிக்காவின் நாசா மற்றும் ஸ்க்ரிப்ஸ் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனங்களில் நீண்ட காலம் பணியாற்றியவர். இவர், 'குளோரோபுளுரோ கார்பன்' வாயுக்கள், கார்பன் டை ஆக்சைடை விட, 10,000 மடங்கு அதிக வெப்பத்தை வளிமண்டலத்தில் தக்கவைக்கும் திறன் கொண்டவை என்பதை, 1975லேயே கண்டறிந்தவர். மேலும், தெற்காசியாவின் மேல் படர்ந்திருக்கும் மாசு மேகங்கள், இந்திய பருவமழை மற்றும் இமயமலை பனிப் பாறைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை, இவரது ஆய்வுகள் விளக்கியுள்ளன.
இந்த விருதுடன், 8.10 கோடி ரூபாய் பரிசுத் தொகையும், தங்கப் பதக்கமும் வீரபத்ரன் ராமநாதனுக்கு வழங்கப்படும். மே 18 - 20 வரை, சுவீடனின் ஸ்டாக்ஹோம் மற்றும் லண்டு நகரங்களில் நடக்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.


