இந்திய தற்காப்பு கலை வீராங்கனை ரோகிணி கலாம் தற்கொலை..!
ஜூஜிட்சு தற்காப்புக் கலை பயிற்சியாளரும் 8-வது ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான ரோகிணி கலாம், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்த ரோகிணி, வேலை அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவருடைய சகோதரி ரோஷிணி தெரிவித்துள்ளார். 28 வயதான அவர், வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது, தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சகோதரி ரோஷ்னி வந்து பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.இருப்பினும், ரோகிணி கலாமின் இந்த திடீர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோகிணி கலாம் மத்தியப் பிரதேசத்தின் தேவாஸில் பிறந்தார். அவர் தனது விளையாட்டுப் பயணத்தை 2007 இல் தொடங்கிய நிலையில், 2015 ஆம் ஆண்டில், ரோகிணி தனது தொழில்முறை ஜியு-ஜிட்சு வாழ்க்கையைத் தொடங்கினார். சமூகத் தடைகளைத் தாண்டி சர்வதேச அளவில் தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் உந்துதல் பெற்றார்.
சிறிது வருடங்களிலேயே, ஜியு-ஜிட்சுவில் இந்தியாவின் சிறந்த போட்டியாளர்களில் ஒருவராக அவர் ஆனார். மேலும், 48 கிலோவில் பல தேசிய சாம்பியன்ஷிப்களை வென்று சமூக அங்கீகாரத்தைப் பெற்றார். ரோகினி தாய்லாந்து ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் 2022 இல் வெண்கலம் வென்றார், ஆசிய மற்றும் உலக சாம்பியன்ஷிப் இரண்டிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஓய்வுபெற்ற பேங்க் நோட் பிரஸ் ஊழியரான ரோகிணியின் தந்தை, தனது மகள் ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விக்ரம் விருதுக்காக பாடுபட்டு வருவதாகவும் என்.டி.டி.வி-யிடம் தெரிவித்தார். அவர் வேலையில் குறிப்பிடத்தக்க அழுத்தத்தில் இருந்ததாகவும், திருமண திட்டங்களையும் மறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


