டி20 தொடரை இழந்தது இந்திய அணி..! இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா படு தோல்வி...!

 
1

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் நடந்த முதல் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மான்செஸ்டரில் நடந்த இரண்டாவது போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாட்டிங்காமில் நடந்த மூன்றாவது போட்டியில் 76 ரன்னுக்கு சுருண்ட இந்திய அணி 125 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-0 என முன்னிலையில் இருந்தது. பிரிஸ்டல் நகரில் உள்ள கவுன்டி மைதானத்தில் நான்காவது போட்டி நடந்தது. இந்திய 'லெவன்' அணியில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா தேர்வாகினர். 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி (15), அபிஷேக் சர்மா (16) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. இஷான் கிஷான் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது வில் ஜாக்ஸ் பந்தில் துபே (22) அவுட்டானார். அடில் ரஷித் வீசிய 15வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஷ்ரேயஸ் அரைசதம் கடந்தார். திலக் வர்மா (11) சோபிக்கவில்லை.

தொடர்ந்து அசத்திய ஷ்ரேயஸ் ஐயர், அடில் ரஷித் வீசிய 18வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாச 20 ரன் கிடைத்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் (5) அவுட்டானார். கடைசி பந்தில் அக்சர் படேல் (1) 'ரன்-அவுட்' ஆனார். இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன் எடுத்தது.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சிதறடித்தது. 13.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 159 ரன்களை இங்கிலாந்து எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடியது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிகெட் தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. தொடரையும் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது.