இந்தியா 387 ரன்களுக்கு ஆல் அவுட்..!

 
1 1

இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால், 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, களமிறங்கிய இந்தியா நேற்று 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் கே.எல். ராகுல் 100 ரன்கள் குவித்தார். அதேபோல், ரிஷப் பண்ட் 74 ரன்களும், ஜடேஜா 72 ரன்கள் சேர்த்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஓக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்தும், இந்தியாவும் தலா 387 ரன்கள் எடுத்ததால் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இதையடுத்து, இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. இறுதியில், 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது. பென் டக்கெட் 2 ரன்னிலும், ஜாக் கிராலி ரன் எதுவும் எடுக்காமலும் (0) களத்தில் உள்ளனர். ஆட்டத்தில் இன்னும் 2 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் 3வது டெஸ்ட் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.