இந்தியா அபார பந்துவீச்சு - 5வது டெஸ்டிலும் இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி முதல் இன்னிங்சில், 218 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இறுதியாக இந்திய அணி 477 ரன்களுக்குஆல் அவுட் ஆனது. இதனை அடுத்து 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல் சொதப்பியது. அந்த அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.