அதிகரிக்கும் பழமைவாதம்.. கலைஞர் ஆட்சியில் இருந்த ‘சமூக சீர்திருத்தத்துறை’ மீண்டும் தேவை - முத்தரசன்..

 
mutharasan

கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ‘சமூக சீர்திருத்தத்துறை’ சீரமைக்கப்பட்டு பரந்துபட்ட முறையில் இயங்கச் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை  முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும் .  தமிழ்நாட்டில் வழக்கொழிந்து வரும் மூடநம்பிக்கை, பழக்கவழக்கங்களை புத்துயிரூட்டி வளர்க்கவும், பழமைவாதக் கருத்துக்களை பரப்புரை செய்வதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.  

சாதி, மதம் சம்மந்தமான கற்பிதங்களுக்கு அறிவியல் முலாம்பூசி நூறாண்டுகள் வளர்த்து, பாதுகாத்து வரும் பகுத்தறிவு சிந்தனையை சீர்குலைக்கும் பேரபாயமாகி வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் தன்னம்பிக்கையூட்டும் சொற்பொழிவு என்ற பெயரில் சனாதனக் கருத்துக்களை பரப்புரை செய்வது தாராளமாக அனுமதிக்கப்படுகிறது. இதில் அரசு சார்ந்த கல்வி நிலையங்களும் விதிவிலக்கில்லை என்பது வேதனையளிக்கிறது. 

அதிகரிக்கும் பழமைவாதம்..  கலைஞர் ஆட்சியில் இருந்த ‘சமூக சீர்திருத்தத்துறை’ மீண்டும் தேவை - முத்தரசன்..  

அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தகவல் தொடர்புதுறை வியக்கதக்க வகையில் முன்னேறியுள்ளது. அச்சு ஊடகங்கள் இன்று மின்னணு ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என பல பரிமாணங்களில் வளர்ந்து குழந்தைகள் தொடங்கி, முதியோர் வரை பயன்படுத்தும் சாதனமாகியுள்ளது. இதில் திரைப்படத்துறையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை பரப்புரை செய்து, “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!!” என்ற தொன்ம மரபுகளை வளர்த்ததில் சமதர்ம, சுயமரியாதை, திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருப்பதையும், இதன் வழியாக நல்லிணக்கம், சகோதரத்துவம் என சமூகம் பண்பட்டுள்ளது.

அதிகார மையத்தில் செல்வாக்கு செலுத்தும் பன்னாட்டு குழும நிறுவனங்களும், நிதி மூலதன சக்திகளும், ஒன்றிய அரசில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள வகுப்புவாத வலதுசாரி சக்திகளின் துணையோடு சமூகபிளவை நிரந்தமாக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

திரைப்படங்கள், நாடகங்கள், சின்னத்திரை தொடர்கள் என எல்லா ஊடகங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆன்மீகவாதி என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி ஆலயங்களிலும், வழிபாட்டு மையங்களிலும் மக்களை திரட்டி தவறாக வழிநடத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் சமூக விழிப்புணர்வு இயக்கத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுப்பது காலத்தின் தேவை என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 

கடந்த காலத்தில் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட ‘சமூக சீர்திருத்தத்துறை’ சீரமைக்கப்பட்டு பரந்துபட்ட முறையில் இயங்கச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்த, அறிவியல் கருத்துக்களை விரிவாக மேற்கொள்ள ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்து செயல்படுத்திட தனித்துறையை உருவாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும் குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.