கோயில் பணியாளர்களுக்கு வழங்கும் திருமணக்கடன் உயர்வு- அரசாணை வெளியீடு
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு திருமணத்திற்காக ஆண் பணியாளர்களுக்கு 6000 மற்றும் பெண் பணியாளர்களுக்கு 10 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதை முதுநிலை கோயில்களுக்கு 2 லட்சமாகவும் முதுநிலை அல்லாத கோயில்களுக்கு ஒரு லட்சமாகவும் திருமண கடன் உயர்த்தி வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்டுள்ளது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப்விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ் அவர்களால் 2026-27 ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக்கோரிக்கையின் போது, சட்டமன்றப்பேரவையில் திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், பணியாளர் நலன் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் திருக்கோயில் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, "திருக்கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமணக்கடன் தொகை உயர்த்தி வழங்கப்படும்" (அறிவிப்பு எண் 81) என மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளின் திருமணத்திற்காக ஆண் பணியாளர்களுக்கு ரூ.6,000/- மற்றும் பெண் பணியாளர்களுக்கு ரூ.10,000/- என திருமணக்கடன் வழங்கப்பட்டு வந்தது. திருக்கோயில் பணியாளர்களின் நலன் சார்ந்த அறிவிப்புகளை இவ்வரசு செயல்படுத்தும் வகையில், தற்போது முதுநிலைத் திருக்கோயில்களின் பணியாளர்களுக்கு ரூ.2 இலட்சமாகவும், முதுநிலை அல்லாத திருக்கோயில்களின் பணியாளர்களுக்கு ரூ.1 இலட்சமாகவும் திருமணக்கடன் தொகை உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சமய இந்த உயர்த்தப்பட்ட திருமணக்கடன்தொகை இந்து அறநிலையத்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து திருக்கோயில்களின் பணியாளர்களுக்கும் பொருந்தும். இக்கடன்தொகை திரும்பப்பெறும் காலம் அரசு ஊழியர்களுக்கான விதிகளின்படி 36 மாதத்தவணையில் பிடித்தம் செய்யப்படும். திருக்கோயில் பணியாளர்களின் பணிநலன். குடும்பநலன் மற்றும் சமூகப்பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன் மற்றும் மகப்பேறு விடுப்பு. திருமண கடன் உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் திருக்கோயில் பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

