கர்நாடகாஅணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
கர்நாடகா அணைகளிலிருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
புதுதில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டில் கருகும் நிலையில் உள்ள குறுவை பயிர்களைக் காப்பாற்ற வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவையே காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது.
இந்நிலையில் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து, தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்து, நேற்று 4,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,300 கன அடியாக உயர்ந்துள்ளது. 15 நாட்களுக்கு 5,000 கன அடி வீதம் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம், நேற்று உத்தரவு பிறப்பித்த நிலையில் நீர் வெளியேற்றத்தின் அளவு அதிகரித்துள்ளது.