நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 20% ஆக உயர்வு

 
paddy

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக  உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

paddy

காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் நெல் அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால், சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக, நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை உயர்த்தி வழங்க கோரி கடந்த பிப்ரவரி 5-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அசு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் நிர்ணயித்துள்ள 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும், முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை  தளர்த்த வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார்.

paddy procurement

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளை ஒன்றிய கூட்டுக் குழு ஆய்வு செய்து, சேகரிக்கப்பட்ட நெல் மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளை ஒன்றிய அரசுக்கு சமர்பித்தது. அதனை அடிப்படையாக கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தற்போதுள்ள 19 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி ஒன்றிய உணவு மற்றும் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. முதிர்ச்சியடையாத, சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 - 5 சதவிகிதம் வரை தளர்த்த கோரிய நிலையில், 5% மாக நிர்ணயித்துள்ளது. சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்த கோரிய நிலையில், 4 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவுகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான அடிப்படை விலையும் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.