முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் - வருமான வரித்துறை எச்சரிக்கை..!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி பாக்கி 13 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு, வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மற்றொரு வாரிசுதாரரான தீபாவின் சகோதரர் தீபக்-கும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தீபா தரப்பில், வருமான வரி பாக்கி முதலில் 36 கோடி ரூபாய் என்றும், பின் 13 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை கூறினால், அதனை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வரி பாக்கி குறித்து விளக்கமாக பதில் அளிக்குமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை வரி பாக்கி வசூல் செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும் படியும் ஆணையிட்டது.
இந்நிலையில், வருமான வரித்துறை சார்பில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி குறித்து உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 2026 ஜனவரி 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு வருமான வரி பாக்கி, வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 17 ஆயிரத்து 962 ரூபாயும், செல்வ வரி பாக்கி 11 கோடியே 8 லட்சத்து 8 ஆயிரத்து 730 ரூபாயும் செலுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக், 6 கோடியே 75 லட்சத்து 32 ஆயிரத்து 342 ரூபாயை ஆறு தவணைகளாக செலுத்துவதாகக் கூறி, 1 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளதாகவும் வருமான வரித்துறை பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வரி பாக்கிக்காக, ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே சில சொத்துக்கள் முடக்கப்பட்டன. வரி பாக்கியை செலுத்தாவிட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வருமான வரித் துறையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி நீதிபதி சரவணன் முன்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


