"சாதாரண நெல்லுக்கும், சன்னரக நெல்லுக்கும் அறிவித்த ஊக்கத்தொகை போதுமானதல்ல" - ஜி.கே.வாசன்

 
gk vasan

தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000/- என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

paddy

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 105/- ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130/- ம் அறிவித்திருப்பது போதுமானதல்ல.அதாவது இயற்கைச் சீற்றம், பொருளாதாரமின்மை, உழவுக்கான கூலி, விதை நெல் விலை, நடவுக்கூலி, அறுவடைக்கூலி, உரம் போன்ற பல்வேறு காரணங்களால் நெல் விவசாயத்தில் முதலீடு செய்த பணம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் விவசாயத்தின் மூலம் இலாபத்தை பெறுவது எப்போது என விவசாயிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இச்சூழலில் விவசாயிகள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000/- வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.ஆனால் தமிழக அரசு இப்போது 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்தில் (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 105/- ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 130/- ம் கூடுதல் ஊக்கத்தொகையாக அறிவித்திருப்பது போதுமானதல்ல. அது மட்டுமல்ல நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,450/- என்றும் கொள்முதல் செய்திட அறிவிக்கப்பட்டுள்ளது.

gk

குறிப்பாக தி.மு.க தேர்தல் நேரத்தில் அறிவித்த குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500/- என்பதை மூன்றாண்டு கடந்தும் நடைமுறைப்படுத்த முன்வராமல் அடுத்த ஆண்டு அதாவது 2025-2026 ல் குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500/- வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது காலம் கடந்த ஒன்றாக அமையும். எனவே தமிழக அரசு 2024-2025 நடப்பாண்டிலேயே குவிண்டால் ஒன்றுக்கு ரு. 2,500/- வழங்க வேண்டும்.மேலும் தமிழக அரசு, காரீப் கொள்முதல் பருவத்தில் நெல் குவிண்டாலுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் தொகையை வழங்கினால் தான் விவசாயத்தில் செய்த முதலீட்டிற்கு ஏற்ப இலாபம் கிடைக்கும். எனவே தமிழக அரசு, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,000/- என்பதை கவனத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.