ரூ. 434.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் திறப்பு

 
tn

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 434.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.9.2023) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் 280 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலை, திருவொற்றியூரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே 58 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நான்குவழித்தட உயர்மட்டபாலம், திருப்பூர் மாவட்டத்தில், 53 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட பல்லடம் - தாராபுரம் சாலை மற்றும் கோயம்புத்தூர் நகரில், கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 41 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்கு வழித்தடச் சாலை மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார். பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலையை கடின பருவங்களுடன் கூடிய இருவழித்தடச் சாலையாக தரம் உயர்த்துதல்

tn

சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 280 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலையில் (மா.நெ 95) 31.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்ட சாலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இத்திட்டத்தில், 5 புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 53 குறு மற்றும் 3 சிறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்தில், முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய முக்கிய ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். நாமக்கல்லின் முக்கிய சுற்றுலா தளமான கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் செல்ல முடியும். மேலும், நாமக்கல்  மாவட்டத்தில் 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும். 

திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணி 

stalin

சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 58 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை இரண்டு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்த 5.50 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய பாலம், தற்போது அகலப்படுத்தப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் சி.பி.சி.எல் (CPCL), ஐ.ஓ.சி.எல் (IOCL), எம்.எஃப்.எல் (MFL) போன்ற தொழிற்சாலைகள் இயக்குவதால் இச்சாலையில் கனரக வாகனங்கள் பெருமளவில் இயக்கப்படுகின்றன. இப்புதிய பாலத்தால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். திருவொற்றியூரிலிருந்து மணலி, மாதவரம், மீஞ்சூர் மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். மணலியிலிருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, இராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாக செல்ல முடியும்.

பல்லடம்-தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக மாற்றியமைக்கும் பணி 

stalin

திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக 53 கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.இத்திட்டத்தில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியுடன், குறுக்கு வடிகால் கட்டுதல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் சாலை மையத்திட்டு அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தித் தொழில்கள் ஆகியவை அருகாமையில் அமைந்துள்ள இச்சாலையானது, திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து செறிவு அதிகம் உள்ள சாலைகளில் ஒன்றாகும். பல்லடம் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள நகரப்பகுதி மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் மக்களின் உயிர்நாடியாக இச்சாலை விளங்குவதால், இதன் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் பணப்பயிர்களை பயிரிட்டு, பருவகாலங்களில் அருகிலுள்ள சந்தைப்படுத்தும் இடங்களுக்கு இச்சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த சாலையானது கோவை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், பழனி போன்ற புனிதத் தலங்களுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இணைப்பை மேலும் மேம்படுத்துகிறது.

கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி

stalin
கோயம்புத்தூர் நகரில், தேசிய நெடுஞ்சாலை எண்.67ல் (நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூர் சாலை) கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 658 மீட்டர் நீளத்திற்கு 41 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். இப்பாலத்தினால் ஜி.என் மில்ஸ் சந்திப்பு மற்றும் 4 இதர சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். மேலும், துடியலூரிலிருந்து சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம், பொள்ளாச்சி மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். ஜி.என் மில்ஸ் பாலத்தின் தள அளவில் காசிநஞ்சகவுண்டன்புதூர், கணபதி, உருமாண்டம்பாளையம், சின்ன வேடம்பட்டி, மணியக்காரன்பாளையம் மற்றும் சரவணம்பட்டி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.