கண்ணிமைக்கும் நேரத்தில் ஒட்டுமொத்தமாகச் சரிந்து விழுந்த பிரம்மாண்ட மலை..!
நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கர நிலச்சரிவு மற்றும் அதன் நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் பார்ப்போரை உறைந்துபோகச் செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப் பெருக்குக்குப் பிறகு, வெறும் ஒரு மாத காலத்திற்குள் நேபாள நாடு மீண்டும் ஒரு மாபெரும் இயற்கை பேரிடரைச் சந்தித்துள்ளது. வியாழக்கிழமை முதல் அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் மிகக் கடுமையான உயிரிழப்புகளும், பெரும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தராய் பகுதியில் உள்ள சில மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு, நீர் தேக்கம் மற்றும் நிலப்பரப்பு அரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்:
மணாங், மியாக்தி, பாகலுங், பர்வாத் மற்றும் பால்பா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால், சேதங்களின் முழு விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
மாவட்ட வாரியான உயிரிழப்பு விவரங்கள்:
-
காண்டகி மாகாணம்: பாகலுங் மாவட்டத்தில் 10 பேர், மியாக்தி மாவட்டத்தில் 6 பேர், மணாங் மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
லும்பினி மாகாணம்: பால்பா மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தனுஷா: மிதிலா நகராட்சியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மணாங் மாவட்டத்தின் சாமே கிராமத்தில், வீடுகள் நிலச்சரிவில் சிக்கித் தரைமட்டமாயின. மக்கள் நிலைமையை உணர்வதற்குள்ளேயே வீடுகளும் நிலங்களும் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் கூச்சலும் அலறலும் நிலவியது.
14 பேர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்:
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 14 பேர் இன்னமும் மாயமாகியுள்ளனர். காவல்துறையின் தகவல்படி மணாங் மாவட்டத்தில் 10 பேரும், மியாக்தியில் 3 பேரும், பாகலுங்கில் ஒருவரும் மாயமாகியுள்ளனர். மேலும், லம்ஜுங், பாகலுங் மற்றும் மியாக்தி ஆகிய பகுதிகளில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, இந்த முறை காளிகண்டகி நதியால் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாராயணி மற்றும் தினார் நதிகளிலும் கடுமையான அரிப்பும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
மணாங் பனிச்சரிவு: 2 மலையேற்ற வீரர்கள் பலி!
மணாங் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு நார்ஃபாபூமியில் உள்ள ஹிம்லுங் ஹிமால் பகுதியில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. மலையேற்றத்திற்காகச் சென்ற 9 மலையேற்ற வீரர்கள் மற்றும் 13 உதவியாளர்கள் என மொத்தம் 22 பேரில் இருவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
10 பேர் நார்ஃபாவின் பூ கிராமத்தில் தொடர்பில் உள்ள நிலையில், எஞ்சிய 10 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. காத்மாண்டூவில் இருந்து மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாக மணாங் மாவட்ட காவல் ஆய்வாளர் வினோத் போஹ்ரா தெரிவித்துள்ளார்.
A massive landslide has struck Nepal and the footage is hard to believe
— Surajit (@surajit_ghosh2) September 28, 2026
It looks like an entire mountain collapsed in seconds pic.twitter.com/P3vUPZMj6X

