புதுச்சேரியில் சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டர் சிவப்பு ரேசன் கார்டுக்கு விலை ரூ.500 குறைகிறது. மஞ்சள் கார்டுக்கு ரூ.350 குறைகிறது என்று புதுச்சேரி முதல்வர் அலுவலகம் அறிவித்து உள்ளது.
கச்சா எண்ணைய் விலை உயர்வால் சமைல் கேஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.1,100-ஐ தாண்டியது. இந்த விலை நிறுவனத்துக்கு நிறுவனம் ரூ.10 முதல் ரூ.20 வரை வித்தியாசம் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.200-ம், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400-ம் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த கட்டண சலுகை இன்றே உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. புதுவையில் ஏற்கனவே மாநில அரசு சிகப்பு ரேஷன் கார்டுக்கு ரூ.300, மஞ்சள் ரேஷன்கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மானியம் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மானியம் வழங்கும் திட்டம் சமீபத்தில் ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை மாநில அரசின் மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை. முழு தொகை அளித்தே கேஸ் சிலிண்டரை புதுவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கேஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது மத்திய அரசின் மானியம் நேரடியாக குறைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதுவை அரசும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினால் சிகப்பு ரேஷன்கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200ம், மாநில அரசின் ரூ.300 சேர்த்து ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும். மஞ்சள் கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200 உடன், மாநில அரசின் ரூ.150 சேர்த்து ரூ.350 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும். ஆனால் மாநில அரசின் மானியம் சிலிண்டரை பெற்ற பிறகு பயனாளிகளின் வங்கி கணக்கில்தான் மானியம் வரவு வைக்கப்படும். இதனால் மத்திய அரசின் கட்டண குறைப்பு ரூ.200 தவிர்த்து எஞ்சிய தொகையை செலுத்தியே புதுவை மக்கள் சிலிண்டரை பெற வேண்டும்.