பழனியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பக்தர்களின் செல்போன் உண்டியலில் போடப்படும்
பழனியில் அனுமதியின்றி கொண்டு செல்லப்படும் பக்தர்களின் செல்போன்கள் உண்டியலில் போடப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதன்மையானது திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். ஆண்டிக்கோலத்தில் மலைமீது நிற்கும் மூலவர் சிலை, போகரால் நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இங்கு முருகனுக்கு ஆறுகால பூஜை நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு பூஜையும் சுமார் 20 நிமிடங்கள் நடக்கும் நிலையில் இதைக் காணப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இருப்பினும் பழனியில் கருவறையில் படம் பிடிக்கக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. அதையும் மீறி சிலர் படம்பிடித்துச் சிக்கிக்கொண்டால், அவர்கள் எடுத்த புகைப்படங்களை அழித்த பின்னர் கேமராவோ அல்லது செல்போனோ மீண்டும் பக்தர்களிடம் வழங்கப்பட்டு வந்தது.இருப்பினும் கடந்த மாதம் சாயரட்சை பூஜையில் கலந்து கொண்ட பக்தர் ஒருவர், மூலவரை படம்பிடித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குக் கோயில் நிர்வாகம் சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதியின்றி செல்போன் கொண்டு வந்ததாக பக்தர்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபராதம் கட்டவில்லை என்றால் செல்போனை உண்டியலில் போட்டுவிடுவோம் என கோயில் ஊழியர்கள் கூறியதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.