உண்மையிலேயே அமைச்சர் கே.என். நேரு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புறக்கணித்தாரா..? உண்மை இது தான்..!
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் திமுக தனது பணிகளை விரைவுப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தான் திருச்சியில் திமுகவின் மாநில மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பாக செய்து இருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் மாநாட்டில் பங்கேற்று பேசினார். துணை முதல்வர், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்பட மாநிலம் முழுவதும் இருந்து திமுகவினர்கள் ஏராளமானவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று பரவி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அந்த வீடியோவில் மேடையில் முதல்வர் ஸ்டாலின், டிஆர் பாலு, திருச்சி சிவா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆ. ராசா, கனிமொழி உள்பட பல தலைவர்கள் உள்ளனர். ஒவ்வொருவரின் கழுத்திலும் அமைச்சர் கே.என். நேரு துண்டு அணிவித்து வரவேற்கிறார். திருச்சி சிவா – ஆ. ராசா ஆகியோருக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் அமர்ந்து இருக்கிறார்.
திருச்சி சிவாவிற்கு, கே.என் .நேரு துண்டு அணிவித்தார். இதையடுத்து தனக்கு துண்டு அணிவிப்பார் என்று உதயநிதி ஸ்டாலின் எழுந்து நிற்கிறார். ஆனால் கே.என். நேரு உதயநிதி ஸ்டாலினை விட்டுவிட்டு அடுத்ததாக இருக்கும் ஆ. ராசாவின் கழுத்தில் துண்டை அணிவித்தார். இதையடுத்து சில வினாடிகள் நின்ற உதயநிதி ஸ்டாலின் தனது இருக்கையில் அமர்ந்தார்.
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, அமைச்சர் கே.என். நேரு மதிக்கவில்லை. அவருக்கு துண்டு அணிவித்து வரவேற்க கே.என். நேரு மறுத்துவிட்டார். இருவருக்கும் பிரச்சனை உள்ளது என்ற தகவல்கள் பரப்பி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
ஆனால் உண்மையில் உதயநிதி ஸ்டாலினை, கே.என். நேரு வரவேற்றார்.
மாநாட்டின் தொடக்கத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு மஞ்சள் நிற துண்டும், செங்கோல் ஆகியவற்றை கே.என்.நேரு, அன்பில் முனைவர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். அதன்பிறகு இரண்டாவதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செங்கோல் வழங்கினார்.இதையடுத்து கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலினின் கழுத்தில் மஞ்சள் நிற துண்டு அணிவித்து வீரவாளை வழங்கினார்.
கே.என்.நேரு முதலில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முதல்வருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேரு உதயநிதிக்கு சால்வை அணிவித்தார். இதன்பின் ஸ்டாலின் மற்றும் உதயநிதி இருவருக்கும் வாள் வழங்கப்பட்டது.இதனையடுத்து கே.என்.நேரு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உதயநிதிக்கு அருகிலிருந்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கும்போது உதயநிதி மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று, மீண்டும் அமர்ந்தார்.இப்பகுதியை மட்டும் வைத்தே கே.என்.நேரு உதயநிதியை புறக்கணித்ததாக பரப்பப்பட்டு வருகின்றது.

திமுக திருச்சி மாநாட்டில் உதயநிதிக்கு சால்வை அணிவிக்காமல் கே.என்.நேரு புறக்கணித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.
கே.என்.நேரு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு மரியாதை செலுத்திவிட்டு மற்ற நிர்வாகிகளுக்கு மரியாதை செலுத்தும்போது எடுக்கப்பட்ட பகுதியை மட்டும் வைத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.ஆகவே யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம்.

