"இன்னும் 4 மாதங்களில் தவெக ஆட்சி கலையும்".. அக்ரி கிருஷ்ணமூர்த்தி..!

 
1

திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கட்சி நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்னும் நான்கு மாதங்களில் தவெக ஆட்சி கலையும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாகத் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எந்த வாக்குறுதியையும் முதலமைச்சர் விஜய் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிச்சயமாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றார்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, "மின்னலை முழுங்கி, மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடியாரின் இதயத்துடிப்புகளே. புரட்சி தலைவர் எம்ஜிஆரின் இதயத்துடிப்புகளே. மாசற்ற புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ரத்த ஓட்டங்களே. அதிமுக என்கிற ஆலயத்தின் பிதாமகன்கள் நீங்கள் தான். நீங்கள் இருக்கின்ற வரை, கழக முன்னோடிகள் இருக்கும் வரை அதிமுகவின் தூசியை கூட யாராலும் தொட முடியாது.

அண்ணன் எடப்பாடி அவர்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார். இன்னும் 4 மாத காலத்திற்குள்ளாக இந்த ஆட்சி கலைக்கப்படும் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சொல்லியுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி அமர்வார். அப்போது நம் கலசப்பாக்கம், செங்கம் சட்டமன்ற தொகுதிகளை தமிழகத்தின் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவோம். உங்கள் உழைப்பு மிகவும் கடினமானது. அதை அங்கீகரிக்க கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு தொண்டர்களும் நினைக்கும் அந்த நாள் வரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை தந்தார்கள். அந்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் தவெகவுக்கு வாக்களித்தனர். 34 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று விஜய் முதலமைச்சராக ஆட்சி, அதிகாரம் செய்கிறார். இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது.

ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கு ரூ.2,500 உதவித் தொகை தருவேன் என்று கூறினார். அவர் சொல்லி 4.5 மாதங்கள் முடிந்துவிட்டது. இதுவரை அத்திட்டத்தை பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. 6 சிலிண்டர் தருகிறோம் என 3 சிலிண்டர்களை தருவதாக பின் வாங்கியுள்ளனர். மக்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். இதன் பிறகு நடக்கும் இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.