"டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு" - அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை

டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனை அடிப்படையில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு மது ஆலைகளில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைகளில் ரூ.1000 கோடிக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் ஆலைகள் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளன என்றும் டாஸ்மாக்கின் போக்குவரத்து ஒப்பந்த விநியோகத்தில் பாரிய முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் விவரங்களில் பெரிய முரண்பாடுகள் காணப்பட்டன என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைப்பு நடந்துள்ளதாக கூறியுள்ள அமலாக்கத்துறை, பார் உரிம டெண்டர்கள் முறையான KYC, GST, PAN விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு டெண்டர் தரப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள் - மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது என்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. திட்டுமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேடு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.