முக்கிய அப்டேட் : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மே மாதம் வழங்கப்படுமா?

 
1

பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் பெறும் பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்துள்ளது. பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம், தற்போது சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை தமிழ்நாடு அரசு, இத்திட்ட பயனாளிகளாக இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே வரவு வைத்துவிட்டது. இப்போது, ஏப்ரல் மாதம் முடிவடைய இருப்பதால் மே மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வருமா? என்ற கேள்வி பெண்கள் மத்தியில் இருக்கிறது.  

மே 6 ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. அதனால், அதற்கு முன்பாக மகளிர் உரிமைத்தொகை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும், ஒவ்வொரு மாதமும் 15 தேதி வாக்கில் தான் அரசு மகளிர் உரிமைத்தொகையை விடுவிக்கும். அந்தவகையில் பார்த்தால், மே 15 ஆம் தேதிக்குள் எதிர்பார்க்கலாம்.  

ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இனிமேல் தமிழ்நாட்டில் புதிதாக பொறுபேற்கும் அரசே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடர்வது குறித்து முடிவெடுக்கும். அதாவது, மே 4 ஆம் தேதி தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு புதிதாக ஆட்சி அமைக்கும் அரசே இது குறித்து முடிவெடுக்கும்.  

அந்தவகையில் பார்க்கும்போது, திமுக மீண்டும் ஆட்சியமைத்தால் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரும். ஆனால் மே மாத தொகை கிடைக்குமா? என்றால், அது குறித்த அறிவிப்புக்கு மே இரண்டாவது வாரம் வரை காத்திருக்க வேண்டும்.   

அதிமுக ஆட்சி என்றால் மே மாதம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால், அக்கட்சி குல விளக்குத் திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது. எனவே, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகே இத்திட்டத்துக்கான அறிவிப்புகள் வெளியாகும். 

எனவே, மே மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வருமா? என எதிர்பார்க்கும் பெண்கள், மே 2வது வாரம் வரை கட்டாயம் காத்திருக்க வேண்டும்.