முக்கிய அப்டேட் : மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பெண்களில் யாரெல்லாம் விண்ணப்பிக்கக்கூடாது..?
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு ஜூலை 15 முதல் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ஏழை, எளிய பெண்கள் விண்ணப்பிக்குமாறு அரசு அறிவுறுத்தியது. தகுதியானவர்கள் ஆவணங்களுடன் முகாமுக்கு சென்றாலே இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முழு வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.ஆனால், எல்லா பெண்களும் இந்த திட்டத்தில் சேர முடியாது. சில பெண்கள் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவர்கள் என தமிழ்நாடு அரசு தெளிவாக கூறியுள்ளது.
அதன்படி, மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்/பராமரிப்பு உதவித்தொகை/ முதியோர் ஓய்வூதியம்/முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்/அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய முதியோர் ஓய்வூதியம், இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியம் பெறும் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
அதேபோல், ஆதரவற்ற விதவைகள், ஆதரவற்ற/கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் பெண்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால், இத்தகைய குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு விதிவிலக்குகளை கொடுத்திருக்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள குடும்பங்களில் வசிக்கும் ஓய்வூதியம் பெறாத தகுதி வாய்ந்த மற்ற பெண்கள் இருப்பின் அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.1000 வழங்கும்.
எனவே, இத்தகைய குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான பெண்கள் இருப்பின் தவறாமல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும். அரசு கொடுத்திருக்கும் பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள்.


