முக்கிய அப்டேட்..! வெற்றி ஆடுகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு அரசின் 'வெற்றி மகளிர் ஆடுகள் வழங்குதல்' திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கப்பட உள்ளதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 2026-2027-ஆம் நிதியாண்டிற்கு, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 869 தகுதிவாய்ந்த பெண்களுக்கு மொத்தம் 4,345 ஆடுகள் வழங்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியின் நிரந்தரக் குடியிருப்பாளராக இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், 100-க்கும் குறைவான கோழிகளைத் தவிர, பயனாளி வேறு எந்தக் கால்நடைகளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனையாகும்.
விண்ணப்பிக்கும் பயனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் எவ்வித நிலமும் சொந்தமாக இருக்கக் கூடாது. இருப்பினும், அரசு வழங்கிய குடியிருப்பு மனை அல்லது வீடு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையால் குறிப்பிடப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களின் கீழ் பயனாளி ஏற்கனவே பயனடைந்திருக்கக் கூடாது. அத்துடன், பயனாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பயனாளி மத்திய அல்லது மாநில அரசு, அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் நிரந்தரப் பணியாளராக இருக்கக் கூடாது.
சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தை அல்லது சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினரைக் கொண்ட பெண்கள், பொருந்தும் இடங்களில் குறைந்தபட்சம் 40 சதவீத மாற்றுத்திறனைக் குறிப்பிடும் செல்லத்தக்க UDID சான்றிதழைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். பெருமூளை முடக்குவாதம் மற்றும் கடுமையான இயக்கக் குறைபாடு போன்ற நிலைகளும் பரிசீலிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள், கைவிடப்பட்ட பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தின் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படுவர். மேலும், மொத்தப் பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பேர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் (SC/ST) சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் (இதில் ஆதிதிராவிடர்களுக்கு 29 சதவீதமும், பழங்குடியினருக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது).
திட்டத்தின் கீழ் பயனாளிக்கு வழங்கப்படும் கால்நடைகளை நிர்ணயிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கும், குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் அரசு கால்நடை மருத்துவ நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் இதர கால்நடை மருத்துவச் சேவைகளை முறையாகப் பின்பற்றுவதற்கும் பயனாளிகள் உறுதியளிக்க வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை மற்றும் தியாகதுருகம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய திட்ட விளக்கங்களைப் பெற்று விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

