ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. செப்.19ல் சிறப்பு முகாம்..!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வரும் 19-ம் தேதி கைவிரல் ரேகை பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட பயனாளிகளின் ஆதார் விவரங்களை சரிபார்க்க இந்த eKYC மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 96.48% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 100% நிறைவு செய்யும் நோக்கில் முகாம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில், eKYC செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று பதிவை மேற்கொள்ளலாம்.
மேலும்,முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்பட உள்ளன. இந்த சேவைகள், ஓ.டி.பி., எனப்படும் மொபைல் போன் எண்ணுக்கு அனுப்பப்படும் கடவுச்சொல் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, ரேஷன் கார்டுக்கு பதிவு செய்த மொபைல் போன் எண்ணுடன், ரேஷன் கார்டுதாரர்கள் பங்கேற்க வேண்டும் என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, கோதுமையை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. எனவே, கடைகளில் உள்ள விற்பனை முனைய கருவியில் கார்டுதாரர்களின் விரல்ரேகை பதிவு மூலம் உண்மை சரிபார்ப்பு பணி நடக்கிறது. இந்த பணியை முடிக்காதவர்கள், விரல்ரேகை பதிவு செய்ய, வரும் 19ம் தேதி ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

