இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும்!!

 
pmk

தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தீண்டாமைக்கு எதிராகவும், தேவேந்திரர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரும், ஈகியருமான இமானுவேல் சேகரனாரின் 66-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் நடத்திய போராட்டங்களையும், அவரது ஈகத்தையும்  நான் நினைவு கூர்கிறேன். சேகரனாரின் ஈகமும், போராட்ட குணவும் மிகவும் போற்றத்தக்கவையாகும்.

PMK

இந்தியாவின் சமூக விடுதலை வரலாற்றில் தவறாமல் இடம் பெற வேண்டிய தலைவர்களின் பெயர்களில்  குறிப்பிடத்தக்கது இமானுவேல் சேகரனாரின் பெயர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களில் தமது 18-ஆம் வயதில் கலந்து கொண்டு சிறைக்கு சென்ற சேகரனார், மக்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் 19-ஆம்  வயதில் இரட்டைக் குவளை முறைக்கு எதிரான மாநாட்டை நடத்தினார். அத்துடன் தமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளாமல் இந்திய போர்ப்படையில் ஆற்றி வந்த பணியை உதறித் தள்ளிவிட்டு, 1954-ஆம் ஆண்டில் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டையும் நடத்தினார். எந்த நோக்கத்திற்காக இமானுவேல் சேகரனார் போராடினாரோ, அந்த நோக்கத்திற்கான போராட்டத்திலேயே, தமது 34-ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை ஈகம் செய்தார்.

இமானுவேல் சேகரனாரின் உயர்ந்த நோக்கங்களுக்காவும், அவரது ஈகங்களுக்காகவும் எந்த அளவுக்கு  அவர் கொண்டாடப்பட்டிருக்க வேண்டுமோ, போற்றப்பட்டிருக்க வேண்டுமோ, அதில் ஒரு விழுக்காடு அளவுக்கு கூட அவர் கொண்டாடப்படவும் இல்லை; போற்றப்படவும் இல்லை என்பது வேதனையளிக்கும் உண்மை. இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள் இப்போது கடைபிடிக்கப்படும் அளவுக்குக் கூட  30 ஆண்டுகளுக்கு முன் மக்களால் நினைவு கூறப்படவில்லை. 1990-களின் மத்தியில் மதுரையிலிருந்து  பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த அணிவகுப்பாக சென்றேன். அங்கு சேகரனாரின் நினைவிடம் காட்சியளித்த கோலம் எனக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.

ஓர் இனத்தின் விடுதலைக்காக போராடிய அந்த மாவீரனின் நினைவிடம் பராமரிப்பின்றி கிடந்தது. அந்த இடத்தை நெருங்க முடியாதவாறு ஒரே துர்நாற்றம் வீசியது. கழிவு நீர் தேங்கிக் கிடந்தது. அந்த இடத்தில் பன்றிகளின் கழிவுகள் தான் நிரம்பிக் கிடந்தன. இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த எனது கண்களில் நினைவிடத்தின் அவலநிலையைக் கண்டு கண்ணீர் கசிந்தது. அந்த இடத்திலேயே இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக எனது சொந்தப் பணம் ரூ. 15 லட்சத்தை வழங்கி நினைவிடத்தை சீரமைத்தேன்.

PMK

அதற்கு அடுத்த நினைவு நாளில் அவரது நினைவிடத்திற்கு சென்று நான் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்தினேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட வேண்டும் என்று ஆணையிட்டேன். அதன்பிறகு தான் அவரது நினைவிடத்தில் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள். இமானுவேல் சேகரனார் 1957-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார்.  அதன்பின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் எவரும் அஞ்சலி செலுத்தியதில்லை. அவரது நினைவிடத்தை நான் சீரமைத்த பிறகு தான், மற்ற தலைவர்கள் அஞ்சலி செலுத்தத் தொடங்கினார்கள்.

இமானுவேல் சேகரனாரின் நினைவிடத்தை சீரமைக்கும் பணிகளை அரசே செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் பல தலைவர்களுக்கு நினைவிடங்கள், மணி மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன; பல தலைவர்களின் பிறந்தநாள் அரசு விழாவாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்புகள் எதிலும் இமானுவேல் சேகரனாரின் பெயர் இடம்பெறவில்லை.இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான அறிவிப்பு இன்று தான் வெளியாகியுள்ளது.

pmk

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9-ஆம் நாள் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9-ஆம் நாள் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்குகிறது. சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கடந்த ஆண்டே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், ஓராண்டாகியும் அரசுத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகவில்லை.

ஒரு தலைவரின் பிறந்தநாள் நூற்றாண்டு அரசு விழாவாக கொண்டாடப்படுவதற்கு என்னென்ன  தகுதிகள் வேண்டுமோ, அத்தனை தகுதிகளும் இமானுவேல் சேகரனாருக்கு உண்டு. எனவே, இன்னும்  28 நாட்களில் தொடங்கவிருக்கும் இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டை  ஓராண்டுக்கு அரசு விழாவாக கொண்டாடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.  அவரது பிறந்தநாள் நூற்றாண்டில், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும், அவை குறித்த பரப்புரைகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று குறிப்பிட்டுள்ளார்.