சென்னையில் திடீர் மழைக்கான காரணம் என்ன? - பாலச்சந்திரன் பேட்டி

 
Balachandran

கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் சென்னையில் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல் 21ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக  சென்னை வேளச்சேரியில் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 4 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும். தமிழகத்தில் வரும் 20ம் தேதி வரை இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பம் பதிவாகும். கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பதால் மழை பெய்கிறது. இவ்வாறு கூறினார்.