தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது - பாலசந்திரன் பேட்டி

 
Balachandran Balachandran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்துள்ளது. தற்போது வரை 18 செ.மீ. மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 12 செ.மீ. மழை தான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. 

வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் காலை முதலே விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.