உங்களுக்கு நான் இருக்கேன்... மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழிசை..!

 
1

சென்னை மெரினா கடற்கரையையொட்டிய நொச்சிக்குப்பம் லூப் சாலையில், மீனவ மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நொச்சிக்குப்பம் பகுதியில் உள்ள டூர் சாலையில் மீன் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் ஆளுநரும், முன்னாள் பாஜக மாநில தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மீனவர்கள் உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து வருத்தம் அடைகிறேன். அவர்களின் துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன். மருத்துவர் என்ற அடிப்படையில் உண்ணாவிரதம் இருங்கள், ஆனால் வெயிலில் தன்னீர் குடிக்காமல் இருக்காதீர்கள் என்று கூறியுள்ளேன். மீனவர்களின் கோரிக்கை நியாயமானது. மீனவ சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவன் என்று கூறும் முதலமைச்சர் இதன் மீது தனி அக்கறை கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மீனவர்களின் போராட்டத்திற்கு முதலமைச்சர் உடனே செவிசாய்க்க வேண்டும்" என்றார்.

நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக பேசிய அவர், "உயர் கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார். புறக்கணிப்பு அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாணவ, மாணவியர்களின் பட்டமளிப்பு விழாவிற்கு வரமாட்டேன் என மறுக்கும் அமைச்சர், அமைச்சர் பதவி ஏற்க மாட்டேன் என சொல்லவில்லை. மாணவர்கள் ஆளுநர் கையில்தான் பட்டத்தை பெறுவேன் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆளுநர் அதற்கு செவி சாய்த்து அனைவருக்கும் பட்டம் தருகிறேன் என சொல்லி உள்ளது பாராட்டுக்குரியது.

ஆளுநரிடம் கோரிக்கை வைத்த அதே மாணவர்கள் உயர்கல்வித்துறை அமைச்சரும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்காமல் பட்டமளிப்பு விழாவிற்கு வர வேண்டும் என கோரிக்கை வைக்க வேண்டும். என்றைக்குமே தமிழ் தாய் வாழ்த்து யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. மத்திய அரசிடம் இருந்து ஒரு புரோட்டகால் வந்துள்ளது. மத்திய அரசின் புரோட்டாகால் படி தான் நடந்தே தவிர எந்த விதத்திலும் மூன்றாம் இடத்திற்கு தமிழ் மொழி தள்ளப்பட்டவில்லை. என் தாய் தமிழை யாரும் புறம் தள்ள முடியாது.

மத்திய உள்துறை அமைச்சகம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு புரொட்டக்கால் என வழங்கவில்லை. இந்தியா முழுவதிலும் ஒரே புரோட்டோகால்தான். இவர்களின் அப்பட்டமான இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது. தமிழ்த்தாயை யாரும் அவமானம் படுத்தவும் முடியாது, குறைத்து மதிப்பிடவும் முடியாது. தேசிய கீதம் இரண்டாவதாக பாடப்படுவதால் இந்திய நாட்டிற்கே இரண்டாம் இடம் தருகிறார்கள் என்று சொல்ல முடியாது. நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய பாடல்கள் சமமாக மதிக்கப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர், "கரூரில் இறந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கியதில், அரசாங்கம் எச்சரிக்கையாக நடந்திருக்க வேண்டும். கரூரில் இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்களுக்கு வருமானம் வருவதற்கு முறையான மாற்று ஏற்பாட்டை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்க பதவிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்புகளை பறித்து அதை அவர்களுக்கு கொடுக்க கூடாது" எனத் தெரிவித்தார்.