மா.சு தொகுதியில் 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை- பாருக்கு சீல்

 
s

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அனுமதிக்கப்படாத நேரத்தில் திறக்கப்பட்டிருந்த மதுபானம் பார் குறித்து வரப்பெற்ற புகாரினைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, சீல் வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் தொடர்பாக சுழற்சி முறையில் தொடர்ந்துக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறாக, இன்று (20.03.2026) சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, ஸ்ரீராம் நகர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடை எண் 926-உடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானம் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் கூடுதல் பறக்கும் படையினர் குழு ஸ்ரீராம் நகர் பிரதான சாலையில் உள்ள மதுபானம் பார் அனுமதிக்கப்படாத காலை நேரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்ததை சோதனை மேற்கொண்டுக் கண்டறிந்தனர். பின்னர், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் உடனடியாக அந்த பார் சீல் வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.