கடலூர் அருகே சட்டவிரோத கருக்கலைப்பு- 6 பேர் கைது

 
ச் ச்

கடலூரில் தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை வீதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வருவதாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலைக்கு தகவல் தெரிவித்து கடலூர் புதுநகர் போலீசார், நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையில் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வரும் சிவகுருநாதன் (55), அவரது மனைவி உமாமகேஸ்வரி (40) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்கள் போலி மருத்துவ தம்பதிகளாக செயல்பட்டு சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது.

கருக்கலைப்பு செய்வதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் இருந்ததை தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், மருந்து விற்பனை பிரதிநிதி மூர்த்தி (33), விருத்தாசலத்தில் இதேபோல் நர்சிங் பயிற்சி மையம் நடத்தி வரும் வீரமணி (36), கடலூர் அடுத்த காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியரான அபியாள் (50), அங்கு மருந்தாளுனராக வேலை பார்த்து வரும் தங்கம் (43) ஆகியோரும் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. பின்னர் இது பற்றி நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.