கனத்த குரலில் பேசிய இளையராஜா..!!
பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய இசையமைப்பாளர் இளையராஜா, "இந்த நாட்டையும் மக்களையும் எப்படி நேசிக்கிறேனோ, அதேபோல்தான் பாரதிராஜாவையும் நேசிக்கிறேன்" என்று நாதழுதழுக்க கூறினார். பேட்டியின்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவர், "பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஆளே போய்விட்டாரே" என்று மிகுந்த விரக்தியுடனும் வேதனையுடனும் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் இளையராஜாவிடம் கருத்து கேட்டபோது, குரல் தழுதழுக்க அவர் கூறியதாவது, "பேசுவதற்கு ஒன்னும் இல்லை... இதில் என்ன இருக்கு? நண்பன் பாரதிராஜா... இந்த உலகத்தை விட்டு போயிட்டாரு. அவருடைய உயிர் நல்லபடியாக இளைப்பாறணும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். அது தவிர வேற எதுவும் சொல்றதுக்கு இல்லை." என்று கூறி இருக்கிறார். இந்த ஒரு வரியே இளையராஜாவின் மனநிலையை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதன்பிறகு அவர் மேலும் பேசும்போது, "எனக்கு மக்கள் எல்லோரும் எந்த அளவிற்கு பிடிக்குமோ... எந்த அளவிற்கு முக்கியமோ... அதே அளவிற்கு என்னுடைய நண்பன் பாரதிராஜாவும் எனக்கு முக்கியம். எனக்கு மரியாதை கொடுக்கிற மக்கள், பாசம் காட்டுற ரசிகர்கள், நண்பர்கள்... எல்லாருமே ஒன்னுதான்." என்று கூறினார். இந்த வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

