தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி- மாவட்டத்திற்கு 5 இஸ்லாமியர்களுக்கு அழைப்பு

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நாளை மாலை இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து, நோன்பு திறப்பில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களுக்கு விருந்தளிக்க உள்ளார்.
நாளை நிகழ்ச்சி நடைபெற உள்ள அரங்கில் செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மற்றும் தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் நாளைய இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் இமாம் முகமது மன்சூர் காசிப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சுமார் 2000 பேர் வரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் டேபிள், நாற்காலி எதுவும் இன்றி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் தரையில் அமர்ந்து நோன்பு திறந்து தொழுகையில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் வருகை ஒட்டி பேரிகேடுகள் அமைக்கப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், “நாளை மாலை 6:24 மணிக்கு இங்கு நடைபெறும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இஸ்லாமிய சகோதரர்களுடன் ஆலோசனை ஈடுபட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த இமாம் முகமது மன்சூர் காசிப், “நாளை ஓய்எம்சிஏ அரங்கில் நடைபெறும் இஃப்தார் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டு மாலை 6.24 மணியளவில் நோன்பை திறந்து வைக்கிறார். அதன் பின் விஜய் தொழுகையிலும் ஈடுபட உள்ளார். தொழுகை முடிந்த பிறகு நோன்பில் கலந்து கொள்பவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2500 லிருந்து 3000 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 120 மாவட்டங்களில் இருந்து மாவட்டத்திற்கு 5 பேர் வீதம் நோன்பு இருக்கும் கட்சியை சேர்ந்த 600 இஸ்லாமியர்கள் நாளைய இஃப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நாளை நடைபெறவுள்ள இஃப்தார் நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15 பள்ளிவாசல் இமாம்களுக்கு என்.ஆனந்த் அழைப்பு விடுக்க உள்ளார்.