சட்டசபையில் டான்ஸ் ஆட வேண்டுமானால் விஜய்யை தேர்வு செய்யலாம்! – நடிகை ஆர்த்தி விமர்சனம்..!

 
1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் ஜோதியை ஆதரித்து காமெடி நடிகை ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கர் இருவரும் பரப்புரை மேற்கொண்டனர். 

 

ஆர்த்தி தனது பரப்புரையின்போது, “ஒருத்தர் நேற்று கட்சி ஆரம்பித்து விட்டு நாளைக்கு முதலமைச்சராகி விட வேண்டும் என நினைக்கிறார். அவர் சினிமாவில் சிறந்த நடிகர். நான் அவருடன் 3 படங்கள் நடித்துள்ளேன். நான் விஜயைப் பற்றி தான் பேசுகிறேன். உங்களை விட அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவரை மாதிரி டான்ஸ் ஆடுவதற்கு தமிழ்நாட்டில் யாருமே கிடையாது. சட்டசபையில் டான்ஸ் ஆட வேண்டும் என்றால் அவரை தேர்வு செய்யலாம். அது வேலை கிடையாது. நம் எல்லாரின் வாழ்க்கையும் ஆட்டம் கண்டு விடும். 

 

ஷூட்டிங் தான் காலையில் தொடங்கி மாலையில் முடியும். 3 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி வந்து விட்டு 6 மணிக்கு வீட்டுக்கு செல்வதெல்லாம் அரசியல் கிடையாது. நான் யாரிடமும் பேச மாட்டேன். என் முகத்தைப் பார்த்து ஓட்டு போட்டு விடுங்கள் என சொன்னால் எப்படி முடியும்?

இங்கு 75 வருடமாக கட்சியை நடத்தி 24 மணி நேரமும் மக்கள் பணி செய்யும் மு.க.ஸ்டாலின் வேண்டுமா?, நான் வேண்டுமா என கேட்கிறார். அகங்காரத்துக்கும், அனுபவத்துக்கும் நாம கொடுக்கப்போற வாக்கு தான் நம்முடைய பதிலாகும். இப்போது தான் சைக்கிள் ஓட்ட தொடங்கியுள்ளார். ராக்கெட் வரை ஓட்ட வேண்டும். அதற்கு இன்னும் காலமாகும்.விஜய் அரசியல் கத்துகிட்டு வரட்டும். அவருக்காக மக்கள் வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது. 

அனுபவமில்லாத அரசியல்வாதியிடம் எப்படி நாட்டைக் கொடுக்க முடியும்?. அவர் அரசியல்வாதி கூட அல்ல.. நடிகர். 50 வருடம் நடிப்பு மட்டுமே தெரிந்த அவருக்கு அரசியல் ஆசையாக உள்ளது. அதே 75 வருடம் அரசியலில் இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு விஜய் மீது ஒரு பாசம் இருக்கும். அதனால் தான் அவர் என்ன சொன்னாலும் பதில் பேசாமல் இருக்கிறார். மக்களாகிய நாம் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். நமக்காக திமுக இருக்கிறார்கள். சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்காதவர்கள். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாம் தோள் கொடுப்போம்” என தெரிவித்துள்ளார்.