இனி வாட்ஸ்ஆப்பில் 'ஹாய்' சொன்னால் ஓபி சீட்! – 22 மாவட்டங்களில் புதிய வசதி தொடக்கம்..!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், புற நோயாளிகள் சிகிச்சைப் பெற, வரிசையில் நின்று புறநோயாளி சீட்டு பெற வேண்டும். அப்போதுதான் டாக்டரை சந்திக்க முடியும். இம்முறையை எளிதாக்கும் வகையில், 'நலம் ஏஐ' என்ற 'வாட்ஸாப் சாட்பாட்' முறை திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், நேற்று தொடங்கி வைத்தார்.
புற நோயாளிகள், 96192 22999 என்ற 'வாட்ஸாப்' எண்ணிற்கு, 'ஹாய்' என அனுப்பினால், ஒரு முறை கடவுச்சொல் வரும். அதை பதிவு செய்து, புறநோயாளிகள் சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம். இந்த சேவை நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக் குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உட்பட 22 மாவட்டங்களில், செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும், புற நோயாளிகள் முன்பதிவு முறையும் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: 'வாட்ஸாப் எண்ணில் பதிவு செய்யும்போது, ஆதார் எண் கட்டாயம் இல்லை. 'வாட்ஸாப்' செயலி இல்லாதவர்கள், மற்றவர்களின் உதவியுடன் கூட, புறநோயாளிகள் சீட்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நெஞ்சகப் பிரிவில், முன்பதிவு முறை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்பின், மாநிலம் முழுதும் விரிவுப்படுத்தப்படும். முன்பதிவு இல்லையென்றாலும், சிகிச்சை மறுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் கட்டணம் '104'ல் புகார் அளிக்கலாம் தனியார் மருத்துவக் கல்லுாரிகள், நான்கரை ஆண்டுகள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். இவற்றை மீறி கல்வி கட்டணம் வசூலித்த கல்லுாரிகள் மீது, விசாரணை நடத்தப்படுகிறது.
அத்துடன், மருத்துவக் கல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து, 104ல் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கழிப்பறை குறித்து புகார் தெரிவிக்கலாம் அரசு மருத்துவமனைகளில் உள்ள கழிப்பறைகளில், 'க்யூஆர் கோடு' ஒட்டப்பட்டிருக்கும். அந்த கழிப்பறைக்கு செல்வோர், அவை சுகாதாரமாக இல்லை என நினைத்தால், மொபைல் போனில், 'க்யூ ஆர் கோடை' ஸ்கேன் செய்து, சுகாதாரமாக இல்லை என தெரிவிக்கலாம். அடுத்த, 10 நிமிடத்தில் சுத்தப்படுத்த வேண்டும். இல்லையென்றல், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

