தைரியம் இருந்தா என் மேல வழக்கு போட்டு பாருங்கள்..! - மிசா காலத்தையே பார்த்தவங்க நாங்க... முதல்வர் விஜய்க்கு சிவசங்கர் சவால்!
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான சி. ஜோசப் விஜய் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளில் அதாவது நேற்று பேசினார். அப்போது அவர் கடந்த கால ஆட்சிகள் குறித்தும், ஊழல் குறித்தும் சில கதைகளைக் குறிப்பிட்டு திமுக அரசை விமர்சித்ததாகத் தெரிகிறது. முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு, திமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான சிவசங்கர் மிகக் கடுமையான மற்றும் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவசங்கர், “முதலமைச்சர் விஜய் இன்னும் தன்னை ஒரு நடிகராகவே நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கள யதார்த்தம் என்னவென்று தெரியாமல், யாரோ எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை அப்படியே சட்டமன்றத்தில் வந்து படிக்கிறார். சினிமா பாணியில் சட்டமன்றத்தில் இன்று அவர் வசனம் பேசியதுபோல் பேசுவது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு என்றும் உதவாது. எனவே, முதலமைச்சர் முதலில் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று அட்வைஸ் செய்யும் தொனியில் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தவெக ஆட்சியில் எவ்வித ஊழலும் இல்லை என்றும், இதுவரை நடந்தது எல்லாமே ஊழல் ஆட்சி என்றும் ஒரு போலியான பிம்பத்தை உருவாக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டு முயன்று வருகிறார் என்று குற்றம் சாட்டினார். “எங்கள் மீது ஊழல் புகார் கூறும் நீங்கள், தைரியம் இருந்தால் என் மீது கூட ஒரு வழக்கு போட்டுப் பாருங்கள். நாங்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் இல்லை. இந்திரா காந்தியின் மிசா காலத்தையே பார்த்து எத்தனையோ கைதுகளை எதிர்கொண்ட பாரம்பரியம் மிக்க கட்சி திமுக” என்றும் சிவசங்கர் சவால் விடுத்துள்ளார்

