இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. தமிழக அரசு வார்னிங்..!

 
1 1

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசு அலுவலர்கள் தங்களது பணியுடன் இந்த வேலையையும் சேர்த்து செய்வதால் கடும் பணிச் சுமையில் உள்ளனர். இந்தச் சூழலில அரசு ஊழியர்கள் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.

வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான FERA இன்று முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் புறக்கணிக்கப்படும் என்று அறிவித்தது. அதுபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைபடுத்திட வேண்டும், தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப்பெற்றிட வேண்டும், புற ஆதாரம் & ஒப்பந்த முறை பணி நியமனத்தை முற்றிலும் கைவிட வேண்டும், நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதம் குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நவம்பர் 18 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர் பணிகளை புறக்கணித்து நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்துறை  ஊழியர்களும் அறிவித்து இருந்த நிலையில், தமிழக அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.