இந்த எண் இல்லையென்றால் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்காது..!
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதலமைச்சர் விஜய் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.
இந்த திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூபாய் 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, நவம்பர் 14ஆம் தேதி வரை அதாவது அடுத்த 40 நாட்களுக்கு முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் 2026 ஜூன் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்க மோதிரம் திட்டமானது, அடுத்த 40 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என இரு வேளைகளில் வழங்கப்படும் எனவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் காலை 25, பிற்பகல் 25 என மொத்தம் 50 பயனாளிகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு, பிரசவம் நடைபெறும் அரசு மருத்துவமனைகளிலேயே தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ், தங்க மோதிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவித்தல், தாய்மையையும் குழந்தைப் பிறப்பையும் கொண்டாடுதல், அரசு சுகாதார சேவைகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துதல் போன்றவைதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த மற்றும் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இந்தச் சலுகையைப் பெற, குழந்தையின் தாய் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்பதுடன், கர்ப்பமானது முதல் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்படும் PICME எண் கட்டாயமாகும்.
மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற குடும்ப ரேஷன் கார்டு, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் மருத்துவமனையின் Discharge Summary ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். இத்திட்டத்தின் நன்மைகள் குடும்பத்தின் முதல் 2 குழந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

