நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும்: பிரதமர் மோடி உறுதி..!

 
modi


தமிழகத்துடன் சேர்த்து, அசாம் மாநில சட்டசபைக்கும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள, 126 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும், 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. 

பா.ஜ.,வின் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 

முக்கியத்துவம் ஓட்டுப்பதிவுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேமாஜி மாவட்டம் கோகாமுக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி நேற்று பங்கேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன், அதாவது, 2014க்கு முன், ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் வகையில், புதிய சட்டத்தை நிறைவேற்ற காங்., முயன்றது. அப்போது தே.ஜ., கூட்டணி அதற்கு வலுவான எதிர்ப்பை தெரிவித்ததால், சட்டம் நிறைவேற்றப்படுவது கைவிடப்பட்டது. 

தற்போது, அசாம் சட்டசபை தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், மாநில அளவில் ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் வகையில், புதிய சட்டத்தை கொண்டு வரும். இதனை காங்., தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். தேசப் பிரிவினையின்போது, நாட்டை பிளவுப்படுத்த முஸ்லிம் லீக் முயற்சி மேற்கொண்டது போல, தற்போது காங்., முயன்று வருகிறது. சட்டமேதை அம்பேத்கர் தயாரித்த அரசியல் சாசனத்தை கூட காங்., மதிப்பது இல்லை. மக்கள் மீதும் காங்., தலைவர்களுக்கு சிறிதும் அக்கறை கிடையாது. குடும்ப நலனுக்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தனித்துவ அடையாளம் அசாமில் மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சியை பிடித்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். 

அசாமின் தனித்துவ அடையாளத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியினரின் பங்கு முக்கியமானது என்பதால், அவர்களின் தன்னாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், ஆறாவது அட்டவணைப் பிரிவின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும். பா.ஜ.,வின், 10 ஆண்டு கால ஆட்சியில் சேவை மற்றும் சிறந்த நிர்வாகம் என்கிற புதிய விடியல் பிறந்துள்ளது. ஆனால், 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த காங்., மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே மூன்று மேம்பாலங்களை மட்டுமே கட்டியது. 

ஆனால், பா.ஜ., ஆட்சியில் ஐந்து புதிய மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. 'ஹாட்ரிக்' வெற்றி அதேபோல், 22 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு உறுதியான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். கூடுதலாக 15 லட்சம் குடும்பங்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்படும். அசாம் மக்களின் ஆசியுடன், மூன்றாவது முறையாக பா.ஜ., 'ஹாட்ரிக்' வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.