விஜய் இன்னும் 2 அல்லது 3 மாநாடுகளை நடத்தினாலே காலி பெருங்காய டப்பாவாக மாறிவிடுவார் - அமைச்சர் சேகர்பாபு..!

 
1

மதுரையில் நடந்த தவெக 2வது மாநில மாநாடு தவெகவுக்கு வெற்றிகரமாக அமைந்தது.அந்த மாநாட்டில் 234 தொகுதிகளிலும் தனது முகத்திற்காக வாக்கு போட வேண்டும் என்று கேட்ட விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார்.வாரிசு அரசியல், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து மட்டுமே பேசினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்றும் அழைத்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுவரை 2 மாநாடு முடித்துள்ளார். இப்போதே நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும்.. ராஜா வேஷம் கலைந்து போச்சு டும் டும் டும் டும் என்பதை போல் அனைத்து தரப்பு விமர்சனங்களையும் தாங்கி சென்றுள்ளார்.விஜய் இன்னும் 2, 3 மாநாடு நடத்தினால் காலி பெருங்காய டப்பாவாகிவிடுவார். ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்ததன் மூலமாக, அவரின் உயரம் அவ்வளவு தான் என்று தெரியப்படுத்திவிட்டார்.

2026ஆம் ஆண்டு களத்தில் நோக்கி திமுக சென்று கொண்டுள்ளது. இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுபவரை களத்தில் சந்திப்போம். 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அந்த வெற்றியை முதல்வர் ஸ்டாலினின் கரங்களில் ஒப்படைப்போம் என்று தெரிவித்தார்.