தீபாவளி பலகாரத்தில் கலப்படம் இருந்தால் இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க..! – மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட உதவி எண்!

 
1

சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் வெளியிட்ட அறிக்கை: 

* தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் தயாரித்து விற்பவர்கள், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும் * தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள், ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறுவது அவசியம் 

* இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் * பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சில்லரை இனிப்பு பொட்டலங்களில், பலகாரம் பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், சைவ, அசைவ, குறியீடு உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்டிருக்க வேண்டும் 

* சில்லரை விற்பனை கடைகளில் காட்சிப்படுத்தப்பட்ட தட்டுகளில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி வாடிக்கையாளர்களுக்கு தெரியும்படி, எழுதி வைக்க வேண்டும் 

* ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத, சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும் 

* அனுமதிக்கப்பட்ட செயற்கை வண்ணங்களை, அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கவர்ச்சிக்காக அதிகமாக பயன்படுத்தக் கூடாது 

* ‘குலோப் ஜாமுன், ரசகுல்லா, ஜிலேபி’ போன்ற இனிப்பு வகைகளுக்கும், முறுக்கு, தட்டு முறுக்கு, சீடை போன்ற காரம் வகைகளுக்கும், அனுமதிக்கப்பட்ட கலர் நிறமிகளை, 100 பி.பி.எம்., மட்டுமே பயன்படுத்த வேண்டும் 

* பரிசு பெட்டிகளில், பாலால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்புகளுடன் சேர்த்து பேக்கிங் செய்யக்கூடாது 

* பலகாரங்கள் தயாரிப்பதற்கான சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களை தகவல் பலகையில் வைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக பயன்படுத்திய எண்ணெய்யை, பயோ டீசலாக மாற்ற அரசின், ‘ரூகோʼ திட்டத்தின்கீழ், நிறுவனங்களிடம் கொடுத்து, அதற்கான தொகையை பெறலாம் 

* இனிப்பு, காரம் தயாரிக்க சுத்தமான குடிநீரை பயன்படுத்த வேண்டும். தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் கட்டாயம் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிந்திருக்க வேண்டும். மருத்துவ தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் * பொதுமக்கள், பண்டிகை காலத்தில் பதிவு பெற்ற நிறுவனங்களில் பலகாரங்களை வாங்க வேண்டும். ரசாயன கலந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் 

* பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் லேபிள், விபரங்கள் சரியாக உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் 

* பொதுமக்கள் உணவுப்பொருட்கள் குறித்த புகாருக்கு, 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், foodsafety.tn.gov.inஎன்ற இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து, ‘புட் சேப்டி கன்ஸ்யூமர்’ செயலியை பதிவிறக்கம் செய்தும் புகார் தெரிவிக்கலாம். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.