“எவனாவது தப்பா நடக்க முயற்சி பண்ணா செருப்பால அடிக்கனும்..” ஸ்ரீரெட்டி குறித்த கேள்விக்கு பளிச்சுன்னு சொன்ன விஷால்...

 
Vishal

 ‘யாராவது தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் முதலில் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும்.  அந்த பெண்மணி அவனை செருப்பால் அடிக்க வேண்டும்’ என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

நடிகர் விஷால் இன்று 48வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் காலை உணவு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்திற்கு வந்து தான் தொடங்குவேன்.  இவர்களை சந்திப்பது மிகப் பெரிய பாக்கியம். அவர்களுடைய ஆசீர்வாதம் மிகப்பெரிய பாக்கியம். நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்துவார்கள். சினிமாவில் 20% பேருக்கு தான் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறோம்;  அவர்கள் சொல்வது உண்மையா;  உண்மையில் திரைப்படம் எடுக்கிறவர்களா என்பது குறித்து முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.  

vishal 34

எவனாவது தவறாக நடந்து கொள்ள முயற்சி பண்ணா முதலில் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும். அப்படி கேட்கிறவர்களை அந்த பெண்மணி செருப்பால் அடிக்கணும். அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடிக்கும் துணிச்சல் வரவேண்டும்.  யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும். 

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என கூற முடியாது. காலம் காலமாக இந்த புகார்கள் உள்ளன.  இங்கும் அதுபோல் பிரச்சனை இருக்கலாம் சில உப்புமா கம்பெனிகள் ஒரு ஆபீஸ் போட்டு போட்டோ சூட் எடுத்து பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.  அதை நான் மறுக்கவில்லை. அதேநேரம் நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும் ஒரு குழு அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும்” என்று கூறினார். 


அப்போது  நடிகை ஸ்ரீ ரெட்டி குறித்து செய்தியாளர்கள் தரப்பில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால், “ எனக்கு ஸ்ரீ ரெட்டி யார் என்றே தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகள் எனக்கு நன்றாக தெரியும்.  உண்மை  எதுவென்று தெரியாமல் ஒருவர் மீது குற்றம் சாட்டுவது தவறான செயல்” என பதில் அளித்துள்ளார்.