பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பேருந்தையே பறிமுதல் செய்க- ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த கூடிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, நீலகிரி மாவட்டத்தில் தானியங்கி குடிநீர் வழங்கல் மையங்கள் தொடர்பாக தவறான அறிக்கை அளித்ததற்காக மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர், மன்னிப்பு கோரியதுடன், தானியங்கி குடிநீர் மையங்கள் பராமரிக்கும் விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் சிக்கல்களை சந்தித்து வருவதாகவும், இந்த ஏ டி எம் மையங்களில் நாணயம் இடும் பகுதியில் சமூக விரோதிகள், சிறு கற்களை வைத்தும், பபிள் கம்களை ஒட்டி விடுவதால் அவை செயலிழந்து விடுவதாகவும், இதற்கு மாற்றாக ஆர்.ஓ. பிளாண்ட்கள் அமைபப்து குறித்து ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் பரிசோதனை நடத்துவது என்பது இயலாத காரியம் எனவும் அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்தில் உள்ள பயணி ஒருவர் பிளாஸ்டிக் வைத்திருந்தாலும் கூட அந்தப் பேருந்துக்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது என்றும், மீண்டும் விதிமீறலில் ஈடுபட்டால் பேருந்தை பறிமுதல் செய்வது எனவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து, நீலகிரி வரும் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டறியப்பட்டால், அந்த பேருந்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், அந்த பேருந்துகளின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறி, வழக்கை தள்ளிவைத்தனர்.