இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதி கொடுத்தால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: ராஜ்நாத்சிங்..!
யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில், மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 25-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், அக்டோபர் 1-ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும் நடக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
2-வது கட்ட தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பூச் பகுதியில் நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வாழும் மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதே சமயம், இந்தியாவின் சீரிய நடவடிக்கையால், ஜம்மு காஷ்மீர் புதிய உருமாற்றத்தை பெற்றிருப்பது அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாம் காங்கிரசை போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை ஒதுக்கி வைக்க மாட்டோம். அவர்கள் விரும்பினால், அந்த மக்களை நம்முடன் இணைத்து வாழத் தயார். இதன்மூலம், அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்.
ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்பதே எங்களின் கொள்கையாகும். பாகிஸ்தான் உள்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்லுறவையே விரும்புறோம். ஆனால், பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் போது, நல்லுறவை எப்படி எதிர்பார்க்க முடியும்.
இந்திய மண்ணில் தீவிரவாதத்தை புகுத்த மாட்டோம் என உறுதி கொடுத்தால், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.