மீண்டும் தேர்தல் வந்தால் தற்போதை விட கூடுதலாக 30 இடங்களில் விஜய் வெற்றி பெறுவார்! – வைகோ..!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திருநெல்வேலியில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கடந்த காலங்களில் நெடுஞ்சாலைத் துறை, பதிவுத்துறை மற்றும் பணி நியமனங்களில் கோடிக்கணக்கில் கமிஷன் பெறப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகளால் பலனடைந்த அதிகாரிகளுக்கு தற்போது பணம் கிடைக்கவில்லை. அவர்கள் இந்த அரசை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதனால் அவர் தவெக அரசின் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். எனவே, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகார வர்க்கத்தில் சிலர் செயல்படுகிறார்கள். அவர்கள் தற்போதைய தவெக அரசை ஸ்தம்பிக்க வைக்க நினைக்கிறார்கள்.
இந்த ஆட்சி 6 மாதங்கள் தான் நீடிக்கும் என்று முன்னாள் முதல்வர் சொல்கிறார். ஆனால், முதல்வர் விஜய் தலைையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும். மீண்டும் தேர்தல் வந்தால் தற்போது பெற்றுள்ள வெற்றியைவிட கூடுதலாக 30 இடங்களில் விஜய் வெற்றி பெறுவார்.
வரும் இடைத்தேர்தல்களிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும். விஜய்யை வெற்றி பெறச் செய்வதற்காக மதிமுகவும் வைகோவும் தெருத் தெருவாகவும், ஊர் ஊராகவும் சென்று பிரச்சாரம் செய்வோம். எத்தனை பொய் பிரச்சாரம் செய்தாலும், அவற்றை தூள் தூளாக்குவதற்கு மதிமுகவும் வைகோவும் இருக்கிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளரைச் சந்திக்கக் கூடாது என முதல்வர் விஜய்யிடம் நான் தெரிவித்திருத்தேன். அதன்படி அவர் சந்திக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காத நிலையில், தற்போது ஆலை நிர்வாகம், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியின் நேர்மைக்கு கிடைத்த சான்று" என்று வைகோ தெரிவித்தார்.

