தோனி நீதிமன்றத்திற்கு வந்தால் நடைமுறையில் சிக்கல் ஏற்படும்- ஐகோர்ட்
100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி தொடர்ந்த வழக்கில், கிரிக்கெட் வீரர் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமனத்தை எதிர்த்து ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2013 ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 2014 ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது ஷஃபிக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பத்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் வாக்குமூலத்தை பதிவு செய்ய தோனி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார். வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முதலமைச்சர் மற்றும் பல்வேறு பிரபலங்கள் நீதிமன்றத்திற்கு வரும் போது தோனிக்கு மட்டும் என்ன சிக்கல் ? கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்து தோனி சட்டத்தை பின்பற்றுவதில்லை எனவும் கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தோனி ஒரு தேசிய அளவிலான பிரபலமாக இருக்கக்கூடிய கிரிக்கெட் வீரர். அவர் நீதிமன்றத்திற்கு வந்தால் நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதோடு, பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்தனர். வழக்கறிஞர் ஆணையர் மூலம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சம்பத்குமாரோ அல்லது அவரது வழக்கறிஞரோ இருப்பார்கள் என்பதால் அவருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை எனக்கூறிய நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் நியமித்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


