அ.ம.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி அளித்தால் சி.பி.ஐ., விசாரணை கேட்போம் - எச்சரிக்கிறார் தினகரன்..!!
திருச்சியில் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அளித்த பேட்டி:
தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை இல்லாமல், பல பகீரத முயற்சிகள் செய்து, ஆட்சி அமைத்துள்ளது.
இருப்பினும், த.வெ.க.,வுக்கு தனிப்பெரும்பான்மை வழங்காமல், எதிர்க்கட்சிகளுக்கு 126 தொகுதிகளை வழங்கி, ஜனநாயகத்தை காப்பாற்றி உள்ளனர்.
அ.ம.மு.க.,வின் ஒரே எம்.எல்.ஏ.,வை, முதல்வர் விஜய் அபகரித்து உள்ளார். இது, குதிரை பேரம் இல்லை என, விஜய் உள்ளிட்டோர் நம்புகின்றனர். ஆனால், அ.ம.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டால், நிச்சயம் குதிரை பேரம் குற்றச்சாட்டு உண்டாகும்.
இதுபோல, அ.தி.மு.க.,வை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய், அக்கட்சியின் 25 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெற்றுள்ளார். ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள், அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது, எந்த வகையில் நியாயம்? அ.ம.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு அமைச்சர் பதவி அளித்தால், நிச்சயமாக, நாங்கள் சி.பி.ஐ., விசாரணை கேட்போம். அதேபோல், அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும், குதிரை பேரம் உறுதியாகும்.
அ.தி.மு.க.,வை அழிக்க, த.வெ.க.,வின் ஏஜன்ட்டாக, அமைச்சர் செங்கோட்டையன் செயல்படுகிறார். அ.தி.மு.க.,வில், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

