எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் - உதயநிதி பேச்சு..

எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணை தான் என்றும், எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமைச் செயலகமான அன்பகத்தில் திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழா இன்று (ஜூலை 20) நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவிற்கு தலைமை வகித்தார். மேலும், இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் மாவட்ட வாரியாக சமூக வலைதளப் பக்கத்தையும், மாவட்ட, மண்டல அமைப்புச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான சமூக வலைதளப் பயிற்சியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.
பின்னர் புதிதாக தொடங்கப்பட்ட 'உங்களுடன் உதயநிதி' சமூக வலைத்தளப் பக்கத்தில், அமைப்பு நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டன. மேலும், 45 ஆண்டு கால இளைஞரணியின் செயல்பாடுகள் குறித்த குறும்படம் ஒன்றும் விழாவில் திரையிடப்பட்டது. அதன்பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மக்களவைத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நன்றி. பிரதமர் மோடி 6 முறை அல்ல ஆயிரம் முறை தமிழகத்துக்கு வந்தாலும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற முடியாது என்று கூறினேன். அதேபோல தமிழக மக்கள் மக்களவை தேர்தலில் நிரூபித்தனர். இதற்கு முக்கிய பங்காற்றிய இளைஞரணி நிர்வாகிகள், செயலாளர்களுக்கு எனது நன்றி.
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் முக்கியம். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம். நான் துணை முதல்வராவேன் என்று வரும் தகவல்கள் வதந்தி. பத்திரிக்கைகளில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது ” என்று அவர் பேசினார். விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் எனவும், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் நீண்ட நாட்களாகவே செய்திகள் வெளியாகிவரும் நிலையில், அவர் இப்படிப் பேசி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.